சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் செயல் முற்றிலும் போலியானது என மக்கள் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

இதன் மூலம் பொதுமக்கள் விமலின் செயலை முற்றாக கண்டிப்பதாகவும், அவர் தொடர்ந்துள்ளது பொய்யான உண்ணாவிரத போராட்டம் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமல் தொடர்பில் பொது மக்களின் பார்வை எவ்வாறு காணப்படுகின்றது என கருத்துக் கணிப்பு ஒன்றினை குறித்த ஊடகம் மேற்கொண்டுள்ளது.

அந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே இந்த செய்தி கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் விமல் தொடர்பில் மக்களிடம் கேள்வி எழுப்பியபோது,

“விமல் கடந்த காலங்களிலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அதன் இரண்டாம் பகுதியையே இப்போது தொடர்ந்து கொண்டு வருகின்றார்”.

“விமல் என்பவர் நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் சிறை சென்றவர் அல்ல. திருட்டை செய்து உள்ளே சென்றவர். அவர் செய்வது நாட்டிற்கும் எதிர் காலத்திற்கும் தவறான வழிகாட்டலாகும்”.

“சாதாரண ஒருவர் சிறை சிறு தவறுக்காக சிறை சென்றால் அது தவறு ஆனால் விமல் செய்யும் போது சரியா? விமல் எனப்படுபவர் திருட்டை செய்து சிறை சென்றவர்”.

“அவர் சேவை செய்தது அவர் குடும்பத்துக்காக. சிறையில் உள்ள ஏனையவர்களும் இவ்வாறு போராட்டம் செய்தால் விடுவித்து விடுவார்களா?”

“விமல் என்ன செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்தவரா? இருந்து விட்டுப் போகட்டும் சிறையிலேயே.”

“இப்போது உண்ணாவிரதம் இருக்கும் விமல் சரத்பொன்சேகாவை இழுத்துக்கொண்டு சென்று சிறையில் அடைத்தபோது எங்கே இருந்தார்?

யாராக இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். அப்படி பார்த்தால் சரத் பொன்சேகா எத்தனை உண்ணாவிரம் மேற்கொண்டிருக்க வேண்டும்.”

“இப்போது யாராவது வந்து இளநீர் கொடுத்தால் அவரது பிரச்சினை சரியாகி விடும். பொய்யான நடவடிக்கையில் விமல் ஈடுபடுகின்றார்”

என்ற வகையில் மக்கள் தெரிவித்துள்ள கருத்துகள் அமைந்துள்ளன. நடைமுறையில் விமலின் வழக்கு மட்டும் அவரும் சரி, அரசியல்வாதிகளும் சரி நினைப்பது வேறு நடப்பது வேறாகவே தொடர்கின்றது.

இதேவேளை விமல் வீரவங்சவிற்கு ஆதரவாக அரசியல்வாதிகள் உட்பட பலர் இருக்கின்றார்கள். ஆனபோதும் பொது மக்களின் பார்வை அவருக்கு எதிராக காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஒரு பக்கம் விமலில் குடும்பத்தார் அவருடைய மகளின் நிலையைக்காட்டி பிணை கோருகின்றனர். அதே சமயம் விமலின் நண்பருமான மகிந்த ராஜபக்ச உதவப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை சந்தேகத்திற்குரியதே.

அதே சமயம் ஆரம்பத்தில் விமலின் விடுதலைக்காக குரல் கொடுத்த ராஜபக்சர்கள் இன்றைய நிலையில் நழுவிச் செல்வதாகவே கூறப்படுகின்றது.

நிலை இவ்வாறு இருக்க விமலின் உண்ணாவிரதப் போராட்டத்தினை அரசு எப்படி கையாளப் போகின்றது என்பது கேள்விக்குறியே.

அதேபோல விமலின் உண்ணாவிரதத்தை அல்லது குடும்ப நிலையை கருத்திற் கொண்டு விமலுக்கு பிணை வழங்கப்படுமாயின்.,

விமலின் கைது முற்றிலும் அரசியல் சார்ந்த விளையாட்டு என்பது உண்மையாகிவிடும் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை ஒரு சில அரசியல் வாதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் இப்போதைய ஆட்சியிலும் பதிவாகியுள்ளது.

ஆனால் விமலின் வழக்கு மாத்திரம் வேறு வகையில் செல்கின்றது அப்படிப் பார்க்கும் போது இது அரசியல் சார்ந்த விளையாட்டா? எனவும் அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயிலும் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டே பல கேள்விகளுக்கு விடை கொடுக்கப்படும் என்றே கூறப்படுகின்றது.

இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் விமலின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஆயத்தமாகி அது போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisements