தமிழின உணர்வுகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் சதிச்செயல்களுக்குத் துணைபோக வேண்டாம் என்றும், இலங்கையில் நடக்கவிருந்த ஏப்ரல் 9ந் தேதிய விழாவினை ரஜினி புறக்கணித்தார் என்ற அறிவிப்பை உடனடியாகவே அவர் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்கிறார். அங்கு வவுனியா சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் லைக்கா நிறுவனம் கட்டியிருக்கும் 150 வீடுகளை, 2009-போரில் வீடிழந்த தமிழர்களுக்குக் கையளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

வரும் ஏப்ரல் 9ந் தேதியன்று நடக்கும் அந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.இந்தச் செய்தியைப் பார்த்ததும் பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது என்ற நிலையில் அது தொடர்பான வருத்தமளிக்கும் கருத்துக்களை தமிழக மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடமையாகிறது.

வீடற்றவர்களுக்கு வீடு தருவது ஒன்றும் பாவ காரியமில்லைதான். அதேநேரம் அந்த வீடு யாரால், ஏன், எந்த நோக்கத்திற்காக தரப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது.

ரூ.350 கோடி செலவில் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 (எந்திரன் – இரண்டாம் பாகம்) திரைப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம்தான் ரூ.22 கோடி செலவில் 150 வீடுகளைக் கட்டித் தருவதாகச் சொல்கிறது.

இந்த 350 கோடி என்பது தமிழ்த்திரையுலகம் இதுவரை கண்டிராத முதலீடாகும். இதை தமிழகத்திலோ தமிழீழத்திலோ மட்டுமல்ல, இந்தப் பூமிப்பந்தின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்தும் அகதிகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களிடமிருந்துதான் வசூலித்தாக வேண்டும்.

அதற்கு பெரியதொரு விளம்பரம் வேண்டுமல்லவா!அப்படி விளம்பரத்துக்காக இந்த விழா பெரிய அளவில் பயன்படும் என்பது ஒருபுறமிருக்க, மிகவும் மோசமான, நயவஞ்சகமான குறிக்கோள் ஒன்றே இதில் பிரதானமாக உள்ளது.

அது, இந்த விழாவை அரங்கேற்றுவதன் மூலம் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீள்குடியேற்றம் சிறப்பாகவே நடப்பதாக உலகை நம்ப வைப்பதுடன் இனப்படுகொலை விசாரணையை முடக்கியதற்கு எதிராக எழும் கண்டனங்களை மூடி மறைப்பதுமாகும்.

நட்பு நாடுகளின் உதவியோடு ஐ.நாவில் இனப்படுகொலை விசாரணைக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் பெற்றது மற்றும் பன்னாட்டு நீதிபதிகளை அனுமதிக்காததற்கு தமிழர்களிடமிருந்து கண்டனங்கள் எழும் சூழலிலேயே லைக்காவின் இந்த விழாவை அரங்கேற்றுகிறது இலங்கை அரசு.

முன்பு தமிழினப்படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை வேண்டி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலில் இதே லைக்கா நிறுவனம் நடிகர் விஜய்யை வைத்து கத்தி என்றொரு திரைப்படத்தைத் தயாரித்து குட்டையைக் குழப்பியது.

இப்போது ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இனப்படுகொலை விசாரணையையே முடமாக்கிவிட்ட சூழலில் அதற்கு எதிராக எழும் கண்டனங்களையும் மூடி மறைக்கும் நோக்கிலேயே ரஜினியை வைத்து படம், ரஜினியை வைத்து விழா என்று பரபரப்பூட்டுகிறது லைக்கா.

தமிழின அழிப்பைக் கண்டுகொள்ளாததுடன் அதை மூடி மறைக்க இலங்கை அரசுடன் சேர்ந்து செயல்படும் இந்த லைக்கா நிறுவனத்தை கத்தி பட விவகாரத்தின்போதே தோலுரித்துக் காட்டியது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அல்லிராஜா சுபாஷ்கரன் என்ற லண்டன் வாழ் இலங்கைத் தமிழரே லைக்காவின் உரிமையாளராக அறியப்பட்டாலும் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் சகோதரி மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சிதான் அதன் ஒரிஜினல் உரிமையாளர்.

2007ஆம் ஆண்டே லைக்கா குழுமத்தின் தாய் நிறுவனமான ஹேஸ்டிங்ஸ் நிறுவனத்தை ராஜபக்சேவின் சகோதரி மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி வாங்கிவிட்டார். இதற்கான ஆதாரங்களை வெளியிட்டதற்காகவே சண்டே லீடர் என்ற இலங்கை ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.

இப்படி இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினருக்கு பினாமியாக செயல்படும் சுபாஷ்கரன், அந்த ராஜபக்சேவைப் பாதுகாக்கும் இலங்கை அரசுக்கும் இசைவாகவே தொடர்ந்து செயல்படுவதன் சாட்சியம்தான் இந்த 2.0 திரைப்படம் மற்றும் 150 வீடுகளை தமிழர்களுக்கு வழங்கும் விழா.

இப்படியான ஒரு நபருடன் நடிப்பு என்ற தனது தொழில் உறவோடு மட்டுமே ரஜினி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம், எதிர்பார்ப்பு.இதை விடுத்து அந்த விழாவில் ரஜினி கலந்துகொள்வாரானால் அது தமிழர்களின் ஆறாத புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாகவே இருக்கும்.

அந்த விழாவில் விக்னேஸ்வரனும் சம்பந்தனும்கூட கலந்துகொள்கிறார்களே என்று கேட்கக்கூடும்.அவர்கள் அங்கு அரசாங்கத்திலும் அரசியலிலும் இருப்பவர்கள். தமிழர்களின் பிரதிநிதிகள். வீடு வழங்குவது போன்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது அவர்களின் பொறுப்பு, கடமை.

ஆனால் அரசு தொடர்பான காரியங்களில் அதற்குச் சம்பந்தமில்லாத வெளி நபர்களுக்கு அங்கு என்ன வேலை?எனவே தமிழர்களை வஞ்சிக்கும் இதுபோன்ற காரியங்களுக்கு ரஜினி துணைபோக வேண்டாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அவரைக் கேட்டுக் கொள்கிறது.

இதில் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் இந்திய அரசின் தூண்டுதலும் இருக்கக்கூடும் என்று கருதவும் இடமுள்ளது. ஏனெனில் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டியவராகவே எப்போதும் ரஜினி இருந்துவந்துள்ளார், இருக்கிறார். அதற்குப் பலியாகாது தமிழர்களின் பக்கமே அவரை நிற்க வேண்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை தண்டிப்பதற்காக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று, இலங்கையில் நடக்கவிருந்த ஏப்ரல் 9ந் தேதிய விழாவினை ரஜினி புறக்கணித்தார் என்ற அறிவிப்பை உடனடியாகவே அவர் வெளியிடுவார் என்றே எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ரஜினிகாந்த இலங்கை விழாவில் கலந்து கொள்ளக் கூடாது!

இலங்கையில் நடைபெறவுள்ள இலவச வீடுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள என்பதே தமிழர்களின் விருப்பமாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறவுள்ள இலவச வீடுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.

நடிகர் ரஜினி காந்த் இலங்கைக்கு சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸும், இலங்கைக்கு ரஜினி செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் திரைப்பட தயாரி்ப்பாளர் ஒருவர் வவுனியாவில் 150 வீடுகளை கட்டியுள்ளார்.அந்த திரைப்பட தயாரிப்பாளர் ராஜபட்சவின் பினாமி என்று கூறப்படுவதால் அவரது விழாவில் ரஜினி காந்த் கலந்து கொள்ளக் கூடாது.

இலங்கை மீது தமிழர்களின் கோபத்தை தணிக்கவே இந்த விழாவுக்கு ரஜினி அழைக்கப்பட்டிருக்கிறார்.எனவே இந்த விழாவை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள் என்றார் ராமதாஸ்.

Advertisements