தமிழ்நாட்டில் தாய் மற்றும் சகோதரியை படுகொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்

தமிழ்நாட்டின் சென்னை நகரில் உள்ள சைதாபேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஹேமலதா. இவருக்கு பாலமுருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை வெகு நேரமாகியும் ஹேமலதா வீடு திறக்காததால் பக்கத்து வீட்டுகாரர்கள் அவர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது ஹேமலதாவும், ஜெயலட்சுமியும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் நடந்த பின்னர் ஹேமலதாவின் மகன் தலைமறைவானார். இதனால் பொலிசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கேளம்பாக்கம் கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரை பொலிசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் தான் ஹேமலதாவின் மகன் பாலமுருகன் என்பதும், அவர் தந்தை இறந்தது முதலே மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

அடிக்கடி நாமும் தந்தை சென்ற இடத்துக்கே குடும்பத்துடன் சென்றுவிடலாம் என்று அவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பாலமுருகன் தனது அம்மா மற்றும் சகோதரியை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பாலமுருகனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements