16 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், ​18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்​’ மாதவன் இருவருக்குமான டாம் அண்ட் ஜெர்ரி துரத்த​லே விக்ரம் வேதா.

படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும் முன், விஜய் சேதுபதிக்கு, படத்தில் அவர் கொடுப்பதுபோலவே  ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! ’வேதா… வேதா’ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் நொடியிலேயே திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணுகிறார் நடிப்பில். வடையை வலது கையில் பிடித்து அசால்ட் நடையில் முதுகு காட்டி சரண்டர் ஆக எண்ட்ரி ஆவதில் தொடங்கி, நம்மை சரண்டர் செய்கிறார். வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. தம்பி கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும், தாதாயிசத்தின்போது குரோதமுமாய் டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார். ‘உனக்கு கத கேட்டுப் பழகிடுச்சு.. எனக்கு கத சொல்லியே பழகிடுச்சு’ என்றபடி மாதவனை மடக்கும் இடங்கள்  மாஸ்!

நேர்மையான போலீஸ் மாதவன் வடசென்னையின் தாதாயிசத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தாதா விஜய் சேதுபதியின் கேங்கை சுற்றி வளைப்பதில்  ஆரம்பிக்கிறது கதை. அதன்பின் தானாக சரண்டராகும் விஜய் சேதுபதி, மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார். அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, விக்ரம், வேதாவைப் பிடிக்கிறாரா.. அவர்மீதும்  என்கவுண்டர் ஆயுதம் பாய்கிறதா என்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்ளுங்கள்!

Advertisements